புன்னகைகளும் விழி நீர்த்துளிகளும் வதனங்களை நோக்கியன்றி கைபேசித் திரைகளுக்காய்த் தேடியலையும் இயந்திரமே உருவான ஒரு வாழ்க்கைக் கோலத்தின் பெருக்கில் வெள்ளத் துரும்பாய்ச் சிக்கியிருக்கும் எமக்குத் தூண்டில் போடும் முயற்சியில் இறங்கியுள்ளது எமது பல்கலைக்கழகம். சமூக அழுத்தத்தின் நிமித்தம் எமது உடலின் தேவைகளைப் புறக்கணித்து இயங்கும் ஒரு மக்கட் குழுவாய் நாம் மாறிவருவது, உண்மையில் கவலைக்குரிய விடயமே!
மாசிலாத் தென்றலுக்கும், புத்துயிர்ப்பளிக்கும் உடற்பயிற்சிக்கும், தீதற்ற போசணை உண்டிக்கும் சிறிதே இடமளிக்கும் இற்றைக் கால நடைமுறை வாழ்க்கையில் உடற் சுகாதாரம், உளச்சுகாதாரம், போசணை, மனவழுத்தக் கட்டுப்பாடு, நோய்த்தடுப்பு, சுகாதார சவால்கள் மற்றும் நித்தம் புதுமை காணும் விஞ்ஞான தொழில்நுட்பங்களின் வினைத்திறனான பாவனை என்பன பற்றிய அறிவு மட்டுமல்லாது, அவை பற்றித் தெரிந்து கொள்ளும் ஆவலும் மக்களிடையே சொற்ப அளவில் தான் காணப்படுகிறது.
அவ்வகையில் இன்றைய சமுதாயத்தின் தேவை கருதி, கடந்த ஆண்டு எமது “YARL MEDEX” கண்ட பாரிய வரவேற்பு மற்றும் வெற்றியினால் உந்தப்பட்டு, யாழ் மருத்துவ பீடத்தின் 40ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, வட மாகாண சுகாதார அமைச்சுடன் இணைந்து யாழ் மருத்துவ பீடம் நடாத்தும் மாபெரும் மருத்துவக் கண்காட்சி, “YARL MEDEX II- 2019” என பிரம்மாண்டமாகப் பரிணமித்துள்ளது. யாழ் பல்கலைக்கழகம், அறிவியல் நகர் கிளிநொச்சியில் எதிர் வரும் சித்திரை மாதம் 2ஆம், 3ஆம் திகதிகளில், காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை, வயது எல்லையின்றிச் சிறுபாலார் முதல் வயது முதிர்ந்தோர் வரை அனைவருக்கும் எளிதாய்ப் பயன்தரும் வகையில் வெகு விமரிசையாக நடைபெறவிருக்கும் இக்கண்காட்சிக்கு உங்கள் அனைவரையும் இரு கரம் கூப்பி, பணிவன்புடன் வரவேற்பதில் மெத்தப் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
அடிப்படை விஞ்ஞானம், மருத்துவத் துறையின் நவீன முன்னேற்றங்கள், சுகாதார தொழில் வாய்ப்புகள், நிகழ்கால சுகாதாரச் சவால்கள், சிறுவர் ஆரோக்கியம், யௌவன பருவ ஆரோக்கியம், வயது வந்தோரின் ஆரோக்கியம், மற்றும் முதியோர் சுகாதாரம் என எட்டுப் பிரிவுகள், பல உப பிரிவுகளை உள்ளடக்கியதாய் தமது காட்சிப் பொருட்களை காட்சிப்படுத்தவுள்ளன. இவற்றுக்கு மேலதிகமாக அறிவுரைப் போட்டிகள், விழிப்புணர்வு நிகழ்வுகள், மற்றும் அடிப்படை மருத்துவ பரிசோதனை வசதிகள் இக் கண்காட்சியில் இடம்பெறவுள்ளன.
மக்களின் வாழ்க்கைத் தரமும் சுகாதார நிலையும் உயர்த்தப்படுதல், உணவுப் போக்கின் தரம் உயர்த்தப்படுதல், நோய் நிலைமைகளையும் அவற்றைத் தடுத்தல் சம்பந்தமான அறிவு மேம்படுத்தப்படுதல், தொற்றா நோய்களின் பெருக்கம் குறைக்கப்படுதல், பாடசாலை மாணவர்களின் உயிரியல் விஞ்ஞானம் தொடர்பான அறிவு மேம்படுத்தப்படுதல், மற்றும் சுகாதாரத் துறை சார்ந்த அறிவூட்டுல் மூலம் சுகாதாரத் துறைக்கு பொருத்தமானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுதல் போன்ற அம்சங்கள் இக் கண்காட்சியின் பெறுதிகளாக எதிர்பார்க்கப்படுகின்றன. அந்த வகையில் இக் கண்காட்சிக்கு உங்கள் வருகை மூலம் ஒத்துழைப்பு நல்கிப் பயன்பெற்று, மருந்தே எம் விருந்து என்பதை மாற்றியமைக்க ஒன்று சேருமாறு எமது மாணவச் சமூகம் வேண்டி நிற்கிறது!
“நோய்நாடி நோய்முதல் நாடி
அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்” – திருக்குறள்.
புத்துயிர்ப்பை நோக்கிய ஆரோக்கியம்……… ஒரு முற்பார்வை
Posted on by medexyarlwpadmn
0